என்ன சொல்கிறார் அறிஞர் அண்ணா? கேள்வியும் - பதிலும்

 1. இயக்கத்தைப் பற்றி தினசரி வதந்திகளை உலவவிட்டு, வம்புக்கு இழுக்கிறார்களே?

நமது இயக்கம் நன்றாகத் தழைத்திருப்பது கண்டு அருவருப்பு அடைபவர் பலர் உண்டல்லவா- அவர்கள், அவர்களின் பண்புக்குத் தக்கபடி பழிசுமத்துவதும், புகார் கிளப்புவதும், வதந்திகளை உலவ விடுவதும், வம்புக்கு இழுப்பதுமாகத்தான் இருப்பர், நாம் அவைகளைப்பற்றிக் கவலைப்படக் கூடாது; நாம் கவலைப்பட வேண்டும், கோபமடைய வேண்டும் என்பதற்காகத்தானே அவர்கள் அவ்விதமெல்லாம் பேசுவதும் எழுதுவதும்! அந்த வலையில் நாம் விழலாமா? நமக்கு நிரம்ப வேலை இருக்கிறதே தம்பி! நமது சக்திக்கு மீறிய காரியத்தை அல்லவா நாம் மேற் போட்டுக் கொண்டிருக்கிறோம். உன் நினைவு முழுவதும் அதிலே செல்லவேண்டும். ஆமாம், சில்லரைகளில் சிந்தனையைச் செலவிடக் கூடாது.

2.தினசரி மீடியாக்களில், செய்தித்தாள்களில் நம்முடைய நல்ல திட்டங்கள், செயல்கள் கூட இருட்டடிப்பு செய்யப் படுகிறதே?

இங்குள்ள "பத்திரிகைகள்' நமது மூலாதாரக் கொள்கையை மறுப்பன. எனவே, அந்தக் கொள்கையை இருட்டடிப்பு மூலம் சாகடிக்கலாம் என்று எண்ணுகின்றனர். இதிலிருந்து நாம் தப்ப வேண்டுமானால், ஒவ்வொரு கிளைக் கழகமம் தனிப்பட்டவர் களும் கூட, இயக்க கருத்துக்களையும் அக்கருத்துக்களுக்கு ஆக்கம் தரும் நிகழ்ச்சி பற்றியும், அவ்வப்போது துண்டு அறிக்கை வெளியிட்டு வீடு தோறும் வழங்க வேண்டும். நமது இயக்கக் கருத்துக்கள் பொதிந்த பாடல்களையும், நாடகங்களையும் மேலும் வளமும் வண்ணமும் உள்ளதாக்க வேண்டும் புள்ளி விவரங்களைத் தயாரித்து. முச்சந்திகளில் பொறித்து வைக்க வேண்டும் கழகத் தோழர் ஒவ்வொருவரும் இம்முறையில் ஏதேனும் ஒரு பணியாற்றி, இயக்கத்துக்குத் தொண்டாற்ற வேண்டும். ஒரு திங்கள் இம்முறையில் பணியாற்றிப் பாருங்கள். உங்கள் மனதுக்கே புதியதோர் உற்சாகம் பிறக்கும். நோக்கம் இவ்வகையில் திரும்பினால், பிறகு, சிறு சச்சரவுகள் பற்றிய சிந்தனையும் அற்றுப்போகும், சீரழிவானவர் வீசும் சிறு சொல்லும் நம்மைச் சுடாது.

3.வெற்று விளம்பரங்கள் அனைவரையும் எளிதில் சென்றடைந்து விடுகிறதே?

திறமைமிக்க ஓவியனொருவன், பழக் கொத்து தொங்குவது போலத் திரையிலே தீட்டித் தொங்கவிட்டிருந்தானாம். பறவைகள் சில பழத்தைக்கொத்தித் தின்பதற்காக வட்டமிட்டனவாம்! ஓவியனுடைய கைத்திறனை அனைவரும் பாராட்டத் தானே செய்வர். ஆனால், பறவைகளும் பாராட்டுரை வழங்கினோரும், ஓவியத்திலே கண்ட பழமே போதும் என்றா இருந்து விட முடியும். பாராட்டுவர், பிறகோ பழச்சுவை தேடி வேறிடம் செல்வர். பறவைகளே கூடப் பறந்துபோகும் பழத்தோட்டம் நோக்கி.

4.சிலர் மூடத்தனத்தை எதிர்க்கத் தயங்குகிறார்களே? எப்போதுமே நாம் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டுமா?

பட்டவர்த்தனமாக, மூடத்தனத்தைக் கண்டித்துப் பேசினால், பாமர மக்கள் சீறிப் பாய்வர், அரசியல் பீடத்தி லிருந்து உருட்டிவிடக் கிளம்பக்கூடும் - எனவே ஜாடைமாடை யாக மட்டுமே கூற முடியும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அறிவு முதிர்ச்சியின் காரணத்தால் அல்ல, தம்பி, அச்சத்தால்தான். நமக்கு அவ்விதமாக அச்சம் எழக் காரணம் இல்லை. நாமோ அரசியல் ஆண்டிப் பண்டாரங்கள்! எனவே பிறர் அச்சத்தால் வாயடைத்துப் போகும் நிலையிலும், நாம் பேசுகிறோம்; ஏசுகிறார்கள், மேலும் பேசுகிறோம்; கல் வீசுகிறார்கள், தொடர்ந்து பேசுகிறோம்; காலிகளை ஏவுகிறார்கள், எனினும் பேசுகிறோம். நாம் இம்முறையில் துணிந்து செயலாற்றினால்தான், அச்சம் காரணமாக வாயடைத்துக்கிடப்போரும், நமக்கென்ன என்று ஒதுங்கிக் கொள்வோரும், நம்மால் ஆகுமா என்று பெருமூச்செறிவோரும், நாம்தானா இதற்கெல்லாம் என்ற சலிப்படைவோரும், மெள்ளமெள்ளத் தமது போக்கை மாற்றிக் கொண்டு, ஜாடைமாடையாக முதலிலும், வெளிப்படையாகவே பிறகும், வீரத்துடன் எதிர்காலத்திலும் பேச முற்படுவர்.

Visit www.viyanbooks.com for more book details and purchases. 
Read https://blog.viyanbooks.com/
#ArignarAnna #HBDAnna #Annaquotes #Anna 

Comments

Popular posts from this blog

அறிஞர் அண்ணாவின் பொன் மொழிகள்

ஒருதலைக் காதலால் கத்திக்குத்து! - இதுதான் காதலா??

தமிழில் பெயர் வையுங்கள்